தமிழ் விக்கிப்பீடியாவும் நானும்
பதிந்தவர் வினோத் ராஜன் மேல் ஜூன் 2, 2008
தமிழ் விக்கிப்பீடியா சரியாக அறிமுகாமி இரண்டாண்டுகள் ஆகின்றன. எப்படியென்று வழக்கம் போல் மறந்து விட்டது. ஏதோ ஆங்கில விக்கி கட்டுரையில் கீழே உள்ள தமிழ் என்ற இணைப்பின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவை அடைந்தேன். அது எந்த கட்டுரை என மறந்து விட்டது. பிறகும் பல கட்டுரைகளின் கீழே தமிழ் என்ற இணைப்பு இருப்பதை கொண்டு அவற்றை கண்டு வந்தேன். ஒன்று மட்டும் புலப்பட்டது, ஆங்கில கட்டுரைகள் பெரியதாக இருக்க தமிழில் அவை குறுங்கட்டுரைகளாகவே இருந்தன. நிற்க. இப்படி இருக்க ஏதோ திடீரென்று கணக்கு ஒன்றை உருவாக்கலாம் என நினைத்து கணக்கை உருவாக்கினேன். எனது முதல் தொகுப்பே, கட்டுரைகள் அனைத்தும்(?) இலங்கை நடையில் உள்ளது என புகார் தான் :). நான் விரும்பிய தலைப்புகளில் கட்டுரைகள் ஏதும் இல்லாததால், எனது விருப்பமான தலைப்புகளிலேயே இயற்றினேன். எனக்கு பிடித்த தலைப்புகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்ற சுயநலமே வேறொன்றும் இல்லை :). முதலில் கிரந்தம் குறித்த கட்டுரையை உருவாக்கினேன். அப்பறம் பிராமி, வட்டெழுத்து, பிராகிருதம். பிறகு ஏனோ தொடர்ந்து பங்களிக்கவில்லை, காரணம் என்னவென்று எனக்கே தெரியவில்லை, ஒரு வேளை விடுமுறைக்கு சென்றிருந்ததால் விக்கிப்பீடியா குறித்து முழுவதும் மறந்து விட்டேனோ என்னவோ, ஒரு இழவும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்கிறது :).
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஆங்கில விக்கிப்பீடியாவில் வழக்கம் போல் எந்த கட்டுரையோ படிக்கபோய் இணைப்புகள் ஊடாக கடைசியில் கிரந்தம் குறித்த கட்டுரைக்கு வந்தேன். அப்போது தான் நான் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதிய அந்த கட்டுரை நினைவுக்கு வந்தது. ஆங்கில் விக்கி நடந்த மாற்றங்களை அங்கும் அப்டேட் செய்தேன். விக்கிப்பீடியா திடீர் ஞாபகத்துக்கு வர அங்கிருந்து தொடர்ந்து பங்களிப்புகளை செய்து வந்தேன். பிறகு மஞ்சுஸ்ரீ உரையாடல், காமசாஸ்திர உரையாடல், இஸநகி உரையாடல் என பலமுறை கடுமையான கருத்துவேறுபாடுகள் எனக்கும் பிற விக்கிப்பீடியர்களுக்கும் தோன்றியது. பிறர்க்கு ஏன் உபத்திரவம் செய்கிறோம் என பல முறை விலகி விட வேண்டும் என்று கூட தோன்றியதுண்டு. அப்படி இருந்தும் கூட யாரும் போய் தொலை
என்றோ தனது கருத்தையும் திணிக்கவோ இப்படித்தான் செய் எனவோ கூறவில்லை. தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று தான் சொன்னார்கள் :). இதுவே வேறெங்காவது இருந்திருந்தால் மாற்றுக்கருத்துடையோரை விலக்கி விட்டுத்தான் மறு வேலை பார்த்திருப்பர்கள். எனக்கு தெரிந்து தமிழ் விக்கிப்பீடியா போல் பிறிதெங்கும் இவ்வளவு நல்லுள்ளம் கொண்டவர்களை எங்கும் காண முடியுமா என தெரியவில்லை. நான் த.வி.யை தவிர வெறெங்கும் பங்களிக்கவில்லை என்பது வேறு விஷயம்.
பிறகு ஏனோ தப்பித்தவறி போய் இங்கு “அதீத தனித்தமிழ் போக்கு” என்று ஓர் உருப்படாத பதிவை போட்டு, அது விக்கிப்பீடியாவில் மிகவும் காரசாரமான கருத்துகளை கொண்டு வந்தது. இது வரையில் தமிழ் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் அந்த பதிவுக்கு பிறர் கூறிய விமர்சனங்களை நான் படிக்கவில்லை. படிக்கவும் போவதில்லை :). இந்த வாதம் பிரதிவாதம் தொடந்தால் பித்தம் தலைக்கேறும் என்ற நிலையில், காலவரையற்ற விக்கி விடுமுறை எடுத்து எனது பித்தத்தை குறைத்து கொண்டேன் :). பிறகு அந்த நிகழ்வின் தாக்கம் மறைந்த பிறகு மீண்டும் ஏதாவது செய்யலாம் என உள்நுழைந்தேன். இந்த காலக்கட்டத்தில் எனது தீவிர நிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணமும் தான். இருப்பினும் பழைய நிலையாக அதி தீவிர தனித்தமிழ் செயல்களை என்னால் எற்றுக்கொள்ளவே முடியவில்லை, யாராவது ஏதாவது செய்கிறார்கள் நம் வேலையை நாம் பார்ப்போம் என்ற மனப்பக்குவமும் வரவில்லை, ஆகையால் திரும்பவும் ஏன் இப்படிச்செய்கிறீர்கள் சொல்லி மீண்டும் ஒரே உரையாடலை மீண்டும் மீண்டும் நானே துவங்க காரணாமகவும் விரும்பவில்லை, கருத்து சொல்லாமலும் இருக்க முடியவில்லை. இந்நிலையில் தான் மிகவும் ஆலோசித்து, தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து கிட்டத்தட்ட குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஏதும் செய்யாது விலக முடிவெடுத்துள்ளேன். இது அவர்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது.
எனினும் நான் தொடங்கிய விக்கித்திட்டங்கள் பல நிறைவாக்கபடாமல் உள்ளன, அவற்றை அங்கு நிறைவு செய்வது சாத்தியம் இல்லாததால், இங்கோ அல்லது புதிய வலைத்தளம் அல்லது வலைப்பதிவிலோ நிறைவாக்க வேண்டும் என்று உத்தேசித்துள்ளேன். இவற்றை அரைகுறையாக விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆக, எனது கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் படித்து விசிறிகளுக்காக(?!?) (அப்படி யாரும் இல்லை என நினைக்கிறேன்
), கூடிய விரைவில் அவை பூர்த்தியாக்கப்படும் :)). ஆக இனி சுதந்திரமாக நான் இவற்றை செய்யலாம் எனபது கூடுதல் சந்தோஷம் :)